Thursday, May 28, 2009

மோட்சம்


நிலவு உருகும்
பொழுதொன்றில்
உன்னிடம் வருவேன்
அடைக்கலமாய்..!

அந்த தனியறையில்
மொழித்தேவையில்லா
உரையாடலில்
ஈரம்துளிர்க்கும்
விழி வழி..
உயிர்பெயரும்
நம் உணர்வுகள்..!

காலக்கிரமத்தில்
ஏமாற்றங்களில்
தேய்ந்த
நம் கைரேகைகள்
கலந்துரையாடும்..!

நீளும் நிசப்தத்தில்
மனக்குகையின்
ஆழ்ந்த இருட்டுக்குள்ளிருந்து
திடீரென முளைக்கும்
வெளிச்ச கைகள்
நம்மை கட்டியணைக்கும்..!

புயலுக்கு பின் அமைதியாய்
புறப்படும்
பெருமூச்சொன்றில்
தூக்கியெறியப்படலாம்...
நம் தீரா வேட்கைகள்..!

முகம் மூடிய
உன் சேலை தலைப்பின் வழி
தெரியும்
உன் மலர்ந்த முகத்தின்
சிரிப்பில்..
எனக்கு கிடைக்கலாம்
வாழ்வின் மோட்சம்..!

Monday, May 25, 2009

வாழ்வின் பசி


அந்த
நாற்றங்காலில்
நடப்படுவோமென
எதிர்பார்க்கவில்லை நாம்.

நதிகளின் கசிவும்
மேகத்தின் பொழிவும்
வளர்த்தெடுத்தென நம்மை.

ஈரமண் துளாவி
வேர்நிலைத்த விளைவில்
வான் நோக்கி வளர்ந்தது
பொன் மணிகள்.

நாள் பார்த்துவந்து
அரிவாள் வினை செய்ய
நேசப்பச்சயம்
வெளுக்க வெளுக்க
பாறையில் கொண்டுபோய்
போரடித்தார்கள்.

வாழ்வின் தூற்றலில்
காற்றின் திசையில்
பயணித்த
உமியாக நான்..,
மூட்டைக்குள்
அடைப்பட்ட..
நெல்லாக நீ..!


இந்த கவிதை இளமைவிகடனில் வெளியானது 

 

நினைவின் குரல்எங்கிருந்தோ
அழைக்கிறாய் நீ..
வேண்டுதலோ..
விருப்பமோ..
கட்டளையோ..
ஏதுமற்று
அது என் கதவை தட்டுகிறது.
ஜன்னலில் எட்டி பார்க்கிறது..
குறுகுறுப்பாய்
வீட்டை சுற்றி வந்து
வாசலில் படுக்கிறது
ஒரு நாய் குட்டியாய்..

சேமித்து வைத்த
பழஞ்சோகங்களை
அலுமினிய தட்டில் வைக்கிறேன்.

இளைப்பினூடே
உண்கிறது
என் புண்களை
உன் நினைவு.

Tuesday, May 12, 2009

எனக்கு பிடித்த என் ஊர்மனிதர்கள் 
யாருமற்ற 
எனது ஊரை 
எனக்கு மிகவும் பிடிக்கிறது..,
சாதிகளின் பெயரில் 
அடையாளப்பட்டாலும்..
எங்கும் 
முட்டிக்கொள்ளாமல் 
இணைந்தேயிருக்கிறது..
அதன் தெருக்கள்.

Thursday, April 23, 2009

ஆப்பிள் தின்ற நாள் முதல்...
என் உயிருக்கு 
அவசியப்படும் 
அந்த ஒன்றை... 
சிறுபிள்ளை போல்.. 
எங்கோ உனக்குள் 
ஒளித்துவைத்துக்கொண்டு... 
வழிமட்டும் காட்டுவேன்.. 
தேடி கண்டடையென.. 
நீ களமிறக்குகிறாய் என்னை.., 

குறுகிய இடுக்கினில் 
மெல்ல நுழைந்து.. 
அடியும்..முடியும்.. 
ஒருசேர தேடி.. 
பயணம் நீள... 
என் சாதகத்தை 
வேதனையாய் கருதினாயோ.என்னவோ... 
ஒளித்தவிடத்திலிருந்து.... 
நான் தேடி வந்ததை... 
அள்ளி..அள்ளி.. 
நீயே தருகிறாய்.., 

நான் உனக்கு தருவதும்.. 
உன்னிடமிருந்து 
நான் பெறுவதுமான 
இந்த 
விளையாட்டில் மட்டுமதான்.. 
வெற்றி வாய்க்கிறது... 
எதிர்த்துப் போட்டியிடும் இருவருக்கும். 

வெற்றிக்கோப்பை 
ஏந்திய களிப்பில் 
ஒன்றாய் கலந்து இழைகிறது.. 
நம்..ஒற்றை சுவாசம். 

Followers