
நிலவு உருகும்
பொழுதொன்றில்
உன்னிடம் வருவேன்
அடைக்கலமாய்..!
அந்த தனியறையில்
மொழித்தேவையில்லா
உரையாடலில்
ஈரம்துளிர்க்கும்
விழி வழி..
உயிர்பெயரும்
நம் உணர்வுகள்..!
காலக்கிரமத்தில்
ஏமாற்றங்களில்
தேய்ந்த
நம் கைரேகைகள்
கலந்துரையாடும்..!
நீளும் நிசப்தத்தில்
மனக்குகையின்
ஆழ்ந்த இருட்டுக்குள்ளிருந்து
திடீரென முளைக்கும்
வெளிச்ச கைகள்
நம்மை கட்டியணைக்கும்..!
புயலுக்கு பின் அமைதியாய்
புறப்படும்
பெருமூச்சொன்றில்
தூக்கியெறியப்படலாம்...
நம் தீரா வேட்கைகள்..!
முகம் மூடிய
உன் சேலை தலைப்பின் வழி
தெரியும்
உன் மலர்ந்த முகத்தின்
சிரிப்பில்..
எனக்கு கிடைக்கலாம்
வாழ்வின் மோட்சம்..!