Thursday, April 23, 2009

ஆப்பிள் தின்ற நாள் முதல்...




என் உயிருக்கு 
அவசியப்படும் 
அந்த ஒன்றை... 
சிறுபிள்ளை போல்.. 
எங்கோ உனக்குள் 
ஒளித்துவைத்துக்கொண்டு... 
வழிமட்டும் காட்டுவேன்.. 
தேடி கண்டடையென.. 
நீ களமிறக்குகிறாய் என்னை.., 

குறுகிய இடுக்கினில் 
மெல்ல நுழைந்து.. 
அடியும்..முடியும்.. 
ஒருசேர தேடி.. 
பயணம் நீள... 
என் சாதகத்தை 
வேதனையாய் கருதினாயோ.என்னவோ... 
ஒளித்தவிடத்திலிருந்து.... 
நான் தேடி வந்ததை... 
அள்ளி..அள்ளி.. 
நீயே தருகிறாய்.., 

நான் உனக்கு தருவதும்.. 
உன்னிடமிருந்து 
நான் பெறுவதுமான 
இந்த 
விளையாட்டில் மட்டுமதான்.. 
வெற்றி வாய்க்கிறது... 
எதிர்த்துப் போட்டியிடும் இருவருக்கும். 

வெற்றிக்கோப்பை 
ஏந்திய களிப்பில் 
ஒன்றாய் கலந்து இழைகிறது.. 
நம்..ஒற்றை சுவாசம். 

Tuesday, April 21, 2009

திரும்ப கிடைத்த என் விலா எலும்பு




என் ஆன்மாவுக்குள்ளிருந்து 
இறங்கி வ்ருகிறது ஒரு வார்த்தை 
நெடுநாளாய் பிரிக்கப்பட்ட 
உன்னையும் என்னையும் சந்திக்க.

திறந்த உன் இமைக்குள்ளிருந்து 
நான் வெளிவந்து எட்டிபார்த்தது 
ஓர் புது உலகக்த்தை.

யார் எதைஅடைக்காத்தோம் 
கருவில் சுமந்தோம் 
என தெரியவில்லை 
ஆனாலும் நாம் நம்மை 
 ஈன்றெடுத்தோம்..!

சமாதிக்குள் வைக்கப்பட்ட
 சிரிப்பொலிகளெல்லாம் 
ஒன்றுகூடி கைகோர்த்து 
களிசெய்து புளகமெய்தின, 
பிறகுதான் தெரிந்தது 
அதை உயிரோடே 
சமாதி வைத்திருந்ததும்..
அவைகளும் ந்ம்மோடே
மூச்சடக்கி வாழ்ந்ததும் 

மரணப்படுக்கையில் 
இறுதி மூச்சுக்கு 
போராடியவனுக்கு 
கிடைத்தது முதல் மூச்சு.
வற்ண்ட நாவில் 
ஆகாய கங்கையின் ஊற்று.
விழிகளுக்கு 
பெண்பால் கண்ணனின் விசுவரூபம்

எனக்கு கிடைத்தது 
என்னிலிருந்து 
எடுக்கப்பட்ட 
எனது விலா எலும்பு.. 

Thursday, April 16, 2009

வீடு திரும்புதல் குறித்து



வாழ்வின் 
ஒப்புமையற்ற தன்மைக்கு 
உவமானம் வேண்டுமா..? 

வாழாததில் வாழும் 
கனவு அது. 
இருப்பதாய் காட்டும் 
இல்லாமையின் 
இருப்பு அது. 

ஓடும் பெரு நதியில் 
எங்கோ ஓரிடத்தில் 
சட்டென குமிழ்ந்து 
பட்டென வெடிக்கும் 
நீர் குமிழ் அது. 

உடனிருப்பதாய் காட்டி 
உபயோகப்படாத 
நிழல் அது 
சூரிய சூட்டில் 
சலவையாகும் 
பனித் துளி அது. 

காரிருள் வானில் 
பளிச்சென தோன்றி 
நொடியில் மறையும் 
மின்னல் அது. 

நிழலாய் தொடரும் 
பிறவியை அறுப்போம் 
விழலெனப்போகும் 
வாழ்வின் கணங்களை 
முழுமையில் மூழ்கி 
மூச்சடக்கி 
பிறவா நிலையின் 
முத்தெடுத்து 
புறப்பட்ட இடத்தின் 
முகவரி தேடி 
திரும்பும் வீட்டுக்குள் 
பத்திரமாய் 
ஒளித்துவ்வைப்போம். 

Monday, April 13, 2009

நீலம்



ஏ..வாசுகி.. 
கெட்டித்த மேலோட்டை 
மென்மையாக்கி 
மனதிடை புகுந்த 
பார்வை மத்தால் 
கனவொரு பக்கமும் 
நினைவொரு பக்கமும் 
நீயே நின்று 
காதலை கடைந்ததன் 
முடிவில் திரண்ட 
அமிழ்தத்தை 
அள்ளி அள்ளி பருகிவிட்டு 
ஆலகாலத்தை 
எனக்கு தந்துவிட்டுப்போகிறாய்.. 

ஒற்றை கையால் 
கண்டத்தை இறுக்கி 
மறுகையால் 
நானெழுதிய 
கவிதையெங்கும் 
பாரித்திருக்கிறது நீலம். 
நுரைத்து வழிகிறது 
உனக்கான 
காதல் சொட்டும் 
வாசகங்கள். 

Sunday, April 12, 2009

எரிதழல் கொண்டுவா தோழி


எரி தழல் கொண்டுவா தோழி சிறு தீப்பந்த நுனியினில் 
சின்னதாயொரு தனல் பொட்டு வைக்க..! 

காட்டு விறகினில் 
கண்டெடுத்த கட்டையாய் 
கண்டாயோ இதை நீ..,.? 
நேற்றையப் பொழுதினில் 
நெடும்படை கண்டு 
உரிமையின் வேள்வியில் 
உயிரை உகுத்த 
ஒரு வீரனின் 
தீரா நடையினில் 
உதிர்ந்த காலின் எலும்பிது..! 

பற்றி எரிந்திட 
சுற்றிய துணியின் 
கதை அறிவாயோ..? 
அது.. 
அத்துமீறல் 
பற்றியிழுத்த கொடும்பொழுதொன்றில் 
மிச்சமாய் கிடைத்த 
என் தங்கையின் சேலை...! 

வாழ்வின் காட்சி இழந்த 
பல நூறு விழிகளின் 
கண்ணீர் வடித்து 
தூக்கிப்பிடித்த 
இத் தீப்பந்தம் எரிய 
எரிதழல் கொண்டுவா தோழி..! 

வெடிகளின் பாதையில் 
வீரமே வெளிச்சம். 
விருட்சம் ஆவதற்கே 
விழுகின்றன விதைகள்...! 

ஆலயமணி - ஆராய்ச்சிமணி

 "உன் மீதென்ன 
இவ்வளவு கறைகள்?" 

 "வெறும் கறைகளல்ல.. 
ரத்தக் கறைகள்..இவை..! 
கொலை வெறிக் கரங்களின் 
பாவம் துடைக்கும்.. 
கைகுட்டை ஆகிவிட்டேன் நான்..!" 

" உன்னை கழுவ 
அந்த ஆண்டவன் வரவில்லையா..?" 

 "சந்தன திருநீற்று 
அர்ச்சனையில் மூர்ச்சையுற்று.., 
மந்திர உச்சாடனத்தின்..உச்சஸ்தாயில் 
செவிப்பறை கிழிந்து.., 
உயிர் வெளுக்க.. 
உடல்களை அடித்து துவைக்கும்.. 
ஆற்றோரக்கல்லாய்.. 
ஆனபின்பு.. 
ஆண்டவனெங்கே வருவது 
என்னைக் கழுவ..? 
ஆமாம்.. 
உன் நிழலில் 
அந்த தாய் பசு இளைப்பாறுகிறதா..?" 

" இல்லை..இல்லை.. 
என்னை..இழுத்து..இழுத்து.. 
சோர்ந்துபோய் செத்துக்கிடக்கிறது.." 

 "முறையிட்ட குரலுக்கு 
மன்னன் வரவில்லையா..?" 

 "த்ன் மகனின் 
மகுடாபிஷேகத்தில்.. 
மார் தட்டிக்கொண்டிருக்கிறான்." 

விதைப்பும் - அறுப்பும்


அன்றொரு நாள்.. 
மல்லிகை கமழ்ந்த 
இருட்டறை ஒன்றில் 
இருவர்..விளயாட்டாய் 
இன்னொரு இருட்டறையில் 
பதுக்கி வைத்த.. 
ஒளிப்புள்ளியின் 
சுடர்.., 
அசைந்தசைந்து.. 
சுற்றுச் சுவரை 
இடிக்க., 
பின்பொரு நாள் 
கருவூர் பொலபொலத்து 
எங்கும் கலந்தது ஒளி..! 

***********0000***************** 

யார்க்கும் 
சொந்தமற்று 
மெய் மாறி வந்த 
புல்லாங்குழலின் 
உள்ளுக்கு வெளிக்கும் 
நடை நடந்த காற்று., 
நிலைகொண்ட 
ஓர் நாள்..கச்சேரி நின்று.. 
குழந்தையின் கையசைவில் 
துவங்கியது மீண்டும்..! 

மூங்கில் காடெங்கும் 
சுவாசத்தின் சுவடுகள். 

கண்மூடி பார்த்தல்




இயற்கை பெருநிலையில் 
ஆன்மாவின்சலவை 
பற்றில் தோயும் 
ஆசைஅலைவை 
உணர்த்தும் 

பொருள்வெளி 
புழுதியை 
புறம்தள்ளி 
மறுதலித்தால் 
புரியும்.. 
தேடுபொருளில் 
புதைந்த நிஜம்..! 

ஆயும் மனச்சுடரை 
அணைத்தாயிற்று., 
பொல்லாத் தனம் எனும் 
அடிமைக் கட்டுக்குள் 
பிணைத்தாயிற்று.. 

திரவியத்தின் திசையில்.. 
உள்ளதெது..? 
அல்லதெது....? 
மனகேமராவின் 
கோணத்தை மாற்றினால் 
துல்லியப்படும் 
பார்க்க துடித்ததும்.., 
பார்க்க கிடைத்ததும்.., 
பார்க்க பணித்ததும்.., 

ஆசையின் சிலுவையில் 
அறையப்பட்ட.. 
ஆன்மாவை அறுத்தெடுக்கட்டும்.. 
உள்முக தேடலின் 
உன்னத தியானம்..! 
பிறகு தெரியும் 
புதுப் பாதையில்.., 
தேடலுக்கான போராட்டம் ஒழிந்து.. 
துவங்கிவிடும்.. 
அமைதியின்.. 
ஞான நர்த்தனம்...! 


ஆரண்யம்..



அடர் வனம் அதிர
இழை தழை 
சரசரக்க..

சார்ந்தூறும்..
மண்வெளி புழுதியில்
அடங்கா விரகத்தை..
வரைந்து..
சீறியது..
 சர்ப்ப இணையொன்று..

உஷ்ஷென..
தலை தூக்கி..
நெம்பி நிமிர்ந்து..
உடலுள் உடல் தோய..
பிணைவதை..
காணல் பாவமென
அகன்றான் பாம்பாட்டி..,

நீட்டிய துப்பாக்கி
வெடித்ததிர
தோலுரித்து போனான்..
வியாபாரி..,

கலாச்சாரம் விழுங்குது
நாகரீக பாம்பு..,
வணிகமல்ல பாம்பாட்டல்..
ஆனால்..
வித்தையாச்சு..
வணிகம்..!

பரிமாற்றம்.


தீ குச்சியிலிருந்து
தீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த
தீயின்..மிச்ச
தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்..

மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்..
அணைத்து கரைக்க..!

உங்கள் கவனத்துக்கு...





எல்லாம்..என
தென்று..
வாரிக் குவிக்
கும்..
முயற்சியின் முடிவில் 
எனக்கே 
நானில்லை 
என்றாகி..
வந்தது வந்த வழி..
சென்றது சென்ற வழி
செல்வதும் 
வருவதுமான 
மூச்சுதூர 
ப..ய..ண..த்..தி..ல் 
சகலமும் 
என் 
பய்ணகால சிநேகிதங்கள்

வாலும்..வாழ்வும்




சூரியன் சரிந்த 
அந்திப் பொழுதொன்றில்.. 
உயிர் கொண்ட 
வீட்டுக் குழல் விளக்கினோரம் 
ஒளி அண்டி ஒதுங்கிய 
சிறு பூச்சியொன்றை.. 
பதுங்கிக் காத்திருந்து.. 
பல்லி விழுங்கியதைக் 
கண்டு பதைத்த.. 
அதே நொடி.. 
அறுந்து விழுந்தது 
பல்லியின் வால், 

மீளாப் பூச்சியின் 
வாழ்வுக்கு.. 
ஈடாகக் கூடுமோ? 
திரும்ப முளைக்கும் வால்.. 

கற்றலில் நிற்றல்...



.செய்வதற்கென்று 

நிறையவே இருந்தது.. 
சாலையிலொருவன் 
மயங்கி சரிகையில் 
ஓடிப்போய் தாங்கவும் 
மடியில் கிடத்தி 
தண்ணீரெனக் கதறி.. 
ஓடும் வாகனம் மறித்து 
மருத்துவமனை விரையவும்.., 

இப்படி 
எதையுமே 
செய்ய இயலாமல் போவதற்கு 
சட்டென கிளம்பிய 
நானிருந்த பேருந்தோ.., 
பக்கத்திருக்கையில் 
என்னை இறுக்கி வைத்திருந்த 
தொந்தி ஆசாமியோ., 
யாருமில்லை காரணம்..என 
உறைக்கும் 
போதி தருணத்தில் 
ஞானம் ஏற., 
தொண்டைக்குழியில் 
தயங்கியிறங்கும்.. 
டப்பாவிலடைத்த 
மதிய உணவு..! 

மீண்டுமொருமுறை 
இப்படி நேர்கையிலும்.. 
இப்படியேதான் 
நடந்துகொள்ளக்கூடும் 
என் 
பாடம் செய்யப்பட்ட 
பாழ்மனம். 


வீட்டின் சாவி


ஏதோ ஒரு புள்ளியில்தான் 
அது 
துவங்குகிறது.., 

வளைந்து நெளிந்து 
சுருங்கி நிமிர்ந்து 
இணைப்பு புள்ளித் தேடி 
தொடர்கோடாய் 
கிளைத்து வளர்ந்து.., 

பூரணப்பட்ட பின்.. 
தனக்கென வாழாமல் 
பிறர்க்கென வாழ்வதில் 
அர்த்தப்படுகிறது.. 
கோலம்.., 

மாறாய்.. 
தனக்கென மட்டுமே 
வாழ்ந்து.. 
அலங்கோலமாகிறது 
வாழ்கை.







நிழலுரையாடல்







மூன்று நிழல்களோடு 
பேசிக்கொண்டிருந்தேன் 
அவற்றின் நிஜம் பற்றி.., 

நிஜமறிந்த நீட்சியில் 
நிழல்கள் கரைந்து 
மெதுவாய் உருவாகின 
நிஜங்கள்.., 

வார்த்தைகள் வளர..வளர.. 
என் நிஜம் கரைந்து.. 
நிழலாகிப்போனேன். 

Saturday, April 11, 2009

தொங்கும் நேசம்









நீ ஏறிவிட்டதாய்ச் சொன்ன 
பேருந்தின் வருகைக்குக் 
காத்திருந்த நிமிடங்களின் 
வலி பற்றி.. 
உன்னிடம்.. 
என்றுமே.. சொன்னதில்லை நான் 
நின்று போகும்.. 
ஒவ்வொரு பேருந்திலும்.. 
நீ இருக்கக்கூடும்.. 
என்கிற தவிப்பும்.., 
இறங்குகிற கால்களில்.. 
உன் தடயம் தேடும் குறுகுறுப்பும்.. 
அன்னியப்பட்டு 
எனக்குகந்த.. உன் நிறத்தில் 
ஆடையணிந்த மனுஷிகளிடை.. 
உன்னைக் காணாத ஏமாற்றமும்.. 
உயிரில் செருகும் கத்திகளை! 
உன் வருகைக்குப் பிறகு.. 
குளிர்பானம் பருகுகையில் 
நீ வந்த பேருந்தைவிடப் 
பத்து மடங்கு 
நான் வேகமாய் இருப்பதாய் 
நீ பேசிச் சிரிக்கையில்.. 
என்னிடம் சொல்லிக்கொண்டு 
நீ கிளம்பப்போகும் 
பேருந்து பற்றிய 
வேதனையில் நானிருப்பதை 
என்றாவது அறிவாயா நீ? 
நான் உடன் வராத 
தனித்த உன் பயணங்களில்.. 
என்றாகிலும் நீ 
ஜன்னலோரத்தில் எட்டிப் பார்க்கையில் 
கண்டுகொள்ளக்கூடும்.. 
அதே பேருந்தில்.. 
தொங்கிக்கொண்டு வரும் என் நேசத்தை!

இந்த கவிதை யூத்ஃபுல்விகடன் டாட் காமில் வெளியானது

 

உத்தரவு







நினைவு விரல்களால் 
தலைக்கோதுவதை நிறுத்து.. 
கண்களின் 
பனிக்குடம் உடைய 
ரத்தக் கவுச்சியடிக்க 
தொப்புள்கொடி சுற்றிப் பிறக்கும் 
கனவுப் பிரசவங்களுக்கு 
சீம்பாலாய் 
இன்னும் எத்தனை நாளைக்குத் 
தருவது.. 
பிரிவின் கண்ணீரை? 

போதும்.. போதுமென 
கிறு கிறுக்கிறேன் நான்.., 
என் உடல் பொருள்.. ஆவியின் 
அத்தனை வாயிலும்.. 
வழிந்து கொட்டுகிறது.. 
வரிந்து.. வரிந்து.. 
நீ ஊட்டிய பிரிவு!


இந்த கவிதை யூத்ஃபுல்விகடன் டாட்காமில் வெளியானது


http://youthful.vikatan.com/youth/venkatpoem03042009.asp 




 

மறத்தலும்..மறத்தல் சார்ந்தும்...






வெகு நாட்களாய் 
மிக குறுகலானதும் 
இருள் நிறைந்ததும் 
காற்று வந்துபோக 
ஏதுவாய் ஜன்னலுமற்ற 
அந்த 
ஒற்றை வார்த்தைக்குள் 
அடைந்து கிடக்கிறாய் நீ.., 

தட்டி தட்டி.. 
அடைந்த அக்கதவெங்கும் 
என் கைரேகைகள் , 
உதிரப்படரல்க்ள், 
மௌனமான 
அவ்வார்த்தைக்குள்ளிருந்து 
நாராசமாய் உன் அலறல்.., 

இன்னொரு வார்த்தைக்கொண்டு 
உடை அந்த வார்த்தையை. 

வார்த்தைகளுக்கு 
அப்பாற்பட்ட 
வாழ்கையின் விரிவு 
வானமெங்கும்.., 

ஒற்றை வார்த்தையிலிருந்து 
உன்னை 
விடுவிக்க.. 
என் மொழியின் 
அத்தனை 
வார்த்தைகளையும் 
பயன்படுத்திய பின் .. 
எனக்கு புரிவதெல்லாம்.. 

நீ நம் மொழி 
மறந்திருக்க வேண்டும்.. 
அல்லது 
செவிடாகி இருக்க வேண்டும்..! 

நீ காற்று...






வடதிசை நோக்கிய 
என் தெருவில் 
நான் நடந்த 
இன்றின் எதேச்சையில் 
அன்றொரு நாள் 
உன்னை எதிர்கொண்டது போலவே 
எதிர்கொண்டேன் 
திடீரென வீசிய காற்றை..! 

பழுத்த சருகுகளும் 
இள்ம்பிஞ்சு பூக்களும் 
சேர்ந்துதிர மரமுலுக்கி., 

மோனத்தவமிருந்த 
தென்னைக்கீற்றிடை புகுந்து 
யாழிசைத்து., 

மொட்டைமாடியில் 
கொடியிலுலர் 
சலவைத்துணிகளைத் தாலாட்டி.., 

காகமொன்றின் 
இயல்பு பறத்தலை 
சட்டென குலைத்து.., 

ஏதோ நடப்பதாய் 
பாதசாரிகளின் 
கவனம் ஈர்த்து.., 

தெருவில் குவிந்திருந்த 
குப்பைகளை.. 
சப்தமிட விலக்கி.., 

என்னை நெருங்குகையில்.. 
எதிர்பாராவண்ணம் 
எங்கோ திரண்ட 
தூசுகளை அள்ளி 
என் முகம் அப்பி.., 

நான் முகம் துடைத்து 
சுதாரிப்பதற்குள்.. 
ஏதும் நடவாதது போல்.. 
என்னை கடந்து போகிறது காற்று.. 

ஏதும் நடவாதது போல்.. 
என்னை ஏமாற்றி.. 
என்னை கடந்து போன... 
உன்னைபோலவே..! 

என்னிலிருந்த அவர்களும்..நானும்...





நாகலிங்க பூக்கள் 
காற்றிலுதிர்ந்து 
கப்பலாய் மிதக்கும் 
தெப்பக்குளத்தின் 
படித்துறையில்.. 
அன்றொரு நாள்.. 
நான் என்னோடு உட்கார்ந்திருந்தேன்.., 

சற்றைக்கெல்லாம்.. 
எதிர்பாராமல் 
என்னிலிருந்து 
வெளிகிளம்பிய 
நீயும் அருகில் வந்து உட்கார.., 

எல்லோருமே 
பேசிக்கொண்டிருந்தோம்.. 
இயலாமைகளுக்கும் கனவுகளுக்குமான 
மைதானத்தில் 
கடைசி நொடியில் கைவிட்டுப்போன 
கோப்பை பற்றிய 
என் அழுகையை.. 
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்., 

கைக்குட்டை எடுத்து 
நீ துடைப்பதற்கு தடையாய் 
உன்னிலிருந்து 
நீ பெயர்த்து வைத்த 
உன் அப்பாவும்.. 
அருகே.., 

நிரம்பிவிட்டது படித்துறை.. 
உன் குடும்பம் 
என் குடும்பம் என்று.., 
இப்போதேனும் 
என்னோடு நீ வர மறுப்பதால்.. 
வேறு வழியின்றி 
நான் என்னோடு 
அங்கிருந்து கிளம்பினேன். 

மறுபடி ஏதேனும் 
ஒரு நாளில் 
நாம் சந்திக்ககூடும் 
இப்படி..! 

உயிரின் கவிதை





தாளகதிக்குட்பட்ட 
வட்டப்பாதையொன்றில் 
நெடுநாளாய்.. 
ஒருவரையொருவர் 
பிடித்துவிடும் 
முயற்சியில் 
சுற்றி சுற்றி 
ஓடுகிறோம் நாம்.., 

நொடிகளின் சங்கமத்தில் 
சுழற்றியடிக்கப்பட்டு.. 
பிரிவின் 
குருதிபொங்கும் 
காலடிச்சுவடுகளை 
சுட்டி சுட்டி.., 
வாட்டும் ஏகாந்தத்தின் 
வேதனையின் பிளிரல் 
மணிக்கொருதரம்.., 

எப்போதோ.. 
யாரோ..தந்த 
உயிர் சாவியின் 
எச்சத்தில்.. 
'டிக்..டிக்..டிக்..' என 
உருகி வழிகிறது.. 
சுவற்றுச் சிலுவையில் 
அறையப்பட்ட.. 
நம் தீராக் காதல்..! 


இந்த கவிதை யூத்ஃபுல் விகடன்.காமில் வெளியானது

ஞாபகப் பெருக்கு..




நினைவு முட்டையை 
அடைகாத்து அடைகாத்து.. 
பொரிக்கிறேன் இக்கவிதையை.., 

தீராக்காதலின் 
ஈனத்தொனியில் 
பிரிவின் வலியில் 
கதறும் 
இக்குற்றுயிரை 
பரிவாய் அணைக்கும் 
என் இறகுகளெங்கும் 
கண்ணீரின் ஈரம்.., 

என்றாவதொரு நாள்.. 
இது கால்முளைத்து.. 
நாம் கைகோர்த்து நடந்த 
அதே ஒற்றையடிப் பாதையில் 
இரைத்தேடி பயணிக்ககூடும்.., 

ஏரிக்கரை 
ஐய்யனார் கோவிலருகாமை 
அரசமரத்தடியில் 
நாம் பதுங்கிய 
இருட்டு நிழல் வரப்போரம் 
அதற்கு கிடைக்கலாம்.. 
ஒரு பூரானோ.. 
சில கரையானோ..., 

இடுகாட்டு 
சுமைத்தாங்கி கல் தாண்டி.. 
ஊரெல்லை நுழைகையில் 
சிறுவர்கள் 
உள்ளங்கையில் வைத்துக் 
கொஞ்சக்கூடுமென்றாலும் 
சாதி வல்லூறுகள் 
பசி தீர்க்க 
படையெடுக்கும் 
ஆபத்தே அனேகம் என்பதால்.. 
பறந்து வந்து போராடி 
மீட்டெடுப்பேன்.. 
என் நினைவையாவது...! 

கட்டுப்படாத காற்று.






அன்றொரு நாள்..
வெளி ஜன்னலில்
அடிக்கடி வீசிய இளங்காற்று...
எதிர்பாராத நாளொன்றில்..
உள்பாய்ந்து,
கனவுப் பூக்கள் நெய்த
திரைச்சீலயை வருட..
உறக்கம் விழிப்பானது!
 
பின்பொரு நாள்..
அதே காற்று..
வந்த சுவடு மறந்து.. வெளியேறிய
நனவின் புழுக்கத்தில்..
விழிப்பும் உறக்கமானது,

வந்து போன.. காற்றின் நினைவாய்..
கதவிடுக்கில்..
கரயான்புற்று!

அழகின் நிறத்தில் ஆபத்து...


தேவதைகளின் 
தேசத்திலிருந்து
நீ வருவதாய் அறிகிறேன்
.
கறுப்பு நிறப் பூக்கள்
பற்றிய அறிதலற்ற..
என் கவிதைப் பட்டறையில்
ஆய்வுக்குட்ப்பட்டிருக்கிறது..
உன்னிரு விழிகள்.

ஒளிப்பார்வையில்
நிலவுத் துணுக்கும்..
சூரியத் துகளும்
கலந்த விகிதாச்சாரம் பற்றிய
யோசனை என்னுள்.

நெளியும் புருவங்கள்..
வரவேற்புத் தோரணமா?
கறுப்புக் கொடியசைவா?

அழகின் தாகம் தீர
உன்னைத் தொட்டு.. தொட்டு..
மேகச்சீலையில்
சித்திரம் தீட்ட
என் மனத்தூரிகையின் உக்கிரம்.

நீ புன்னகைக்கிற போதெல்லாம்..
பூமிக்கு வசந்தம்,
பேசுகிற போதெல்லாம்..
மொழிக்கு கர்வம்
.
உன் ஒப்பணை அறையின்
நிலைக்கண்ணாடியை
நினைத்து.. நினைத்து..
பற்றியெரியும்..
பொறாமைத்திரியால்..
எப்போதும்.. வெடிக்கலாம்..
என் இதயம்.

மன லாயம்




என்னில் உன்னை
விதைத்த
விழாக் காலத்திற்குப் பிறகான
விபரீதங்களை
விவரித்தாக வேண்டும் நான்,
விழிகளை.. செவிகளை.. உயிரை..
ஊடுருவிய..
வயிற்றின் பசி..
உன் பிம்பம் கண்டும்..
குரல் கேட்டும்
அடங்கிப்போன அதிசயம்.
தனிமை இருட்டின் 
அடர் வண்ணம் தொட்டு
படுக்கை விரிப்பெங்கும்..
உறக்கம் பிடிக்காத 
உடல் தூரிகையால்
புரண்டு.. புரண்டு..
வரைந்த் சித்திரங்கள்..
உன் நினைவு லாயத்தில்
சுருள
எண்ணப் பொதி சுமக்கும்..
மனம்..
குரும்பாடாய்.. பட்டிக்குத் திரும்பும்
யதார்த்தம்.

யாவற்றுக்கும் அப்பால்..

























பருவப்பாவு
நெய்தென்னை
முச்சந்தியில்
'தொங்கவிட
வசீகரித்து
வாங்கி உடுத்தியவளின்..
இடது மார்பில் கிழிந்து
அவள்
தூக்கி எரிந்த பெட்டிக்குள்
அவளைக்
கட்ட முடியாத
புடவையாக நான்!

Sunday, April 5, 2009

அழகின் அரக்கி




அடி சாகஸக்காரி
உன் கன்னக்கோல் சிரிப்பால்
களவு போகிறது என் உறக்கம்.
உன் விழியின் சின்ன அசைவிலும்
விரிசல் காணுகிறது
என் வீர்யம்.
எந்தக் கலை பண்பாட்டிலும்
காண முடியாத அடவுகளை
அடக்கியாளுகிறது
உன் நடை.
குயிலும் யாழும் சிட்டுக்குருவியும்
கூடு கட்டும்
உன் தொண்டைக் குழியிலிருந்து
நித்தமும்
நவ நவமாய்
நழுவி விழுகிறது சிம்பொனி.
உன் பாதக் கொலுசுகளிடம்
பணயம் வைக்கிறேன்
என் கர்வத்தை.
கை விலங்கு கால் விலங்கு
கேள்விப் பட்டிருக்கிறேன்,
நீ எனக்கு..
மெய் விலங்கை அல்லவா
மெய்யாகவே பூட்டிவிட்டாய்?

பிரிந்தவர்களுக்கான நிலா




நான் நிலாவைப் பார்க்கும்
அதே நேரத்தில்தான்
நீயும் பார்க்கிறாய் நிலாவை..
நான் பார்ப்பதை நீயும்..
நீ பார்ப்பதை நானும்
பார்க்க முடியாமல் தவிப்பதைப்
பார்த்தே கிடக்கிறது நிலா.

நாம் பேச நினைப்பதெல்லாம்...




எல்லைக்குட்ப்பட்ட
ஆசைகளின் விளிம்பில்..
உனக்கும் எனக்குமான
இடைவெளியை இட்டு நிரப்ப
வார்த்தைகளையும்..
இன்னபிற.. பொருள் தரும்..
குறிப்பறிவித்தல்களையும்..
தேடி.. தேடியே..
கழிகிறது காலம்.
சமயங்களீல் 
சொல்லப்படாத வார்த்தைகளை மீறி..
பார்வைகளின் அர்த்தப் பிரவகிப்பில்
நனைகிறோம்.. நாம்.
உதடுகளில்.. ஊனமும்..
மொழி பேசத் துடிக்கும்
கருவிழிகளும் என..
பெருமூச்சில் ஓங்கிக் கலந்து..
கரைகிறது..
நம் எல்லையற்ற நேசம்

நாம் பேச நினைப்பதெல்லாம்..
யாரோ பேச..
கேட்க கூடுமோ நாம்..?

பிரிவில் இணைந்தவர்கள்...



எப்படி இருப்பாயோவென
எப்படி எப்படியோ எண்ணி
மறுகுகையில்,
இப்படித்தான் இருக்கிறாய்
என அறிந்தால்..
இருக்க வேண்டியதில்லை..
இப்படி நான்,
அப்படித்தான் ஆனதிங்கே..
தரவும்.. பெறவும்.. முடியாமல்..
ஆறுதலை!

இரவுக்கு தாலாட்டு



தூக்கம் வராத
இரவுப் பொழுதொன்றில்
நான் தூங்காததால்..
நீயும் தூங்கி இருக்க மாட்டாய்
என்றெண்ணி..
தொலைபேசி வழி அழைக்கிறேன்
உனைத் தூங்க வைக்க...,

நான் தூங்கிவிட வேண்டுமென..
நீ 
தொலைபேசியை எடுக்காததன்
நீட்சியில்...
நானும் தூங்க எத்தனிக்கையில்

என் தொலை பேசிவழி
நீ அழைக்கிறாய்..,

பேசிப் பேசியே தூங்க வைத்தோம்
அந்த இரவை!

இப்படித்தான்




விழிகள் இடித்து..
உயிரில் அதிர்வு.

மனக்குகை இடுக்கில்
பார்வையின் விதைகள்.

கனவுகளின் மார்பில் பாலருந்தி
விழிப்பூந்தொட்டியில்
துளிர்த்து சிரிக்கிறது..
இதயங்களின் வார்த்தை.

இமை மாறிப் படபடக்கும்
இமைவழி நிகழ்கிறது..
உயிர் மகரந்தச் சேர்க்கை.

வெவ்வேறான வேர்களில்..
ஒரே மாதிரியான
பூவை மலர்த்தித்
தன் இருப்பைக் காட்டுகிறது
காதல்!

மௌனக்கோட்டை


வெளியே எடுக்க வழியின்றி..
யாளியின் வாய்க்குள்
உருளும் கல்லென
நெடு நாளாய்..
என் வாய்க்குள்..
உருட்டிக்கொண்டிருக்கிறேன்
ஒரு வார்த்தையை..,

ஒலிக்கத் துணிவற்று..
பின்வாங்கி பதுங்கி
தொண்டையில் திரண்ட
மௌனத் தேன்கூட்டின்
அடை ஒன்றைப் பெயர்த்து
உன் செவிகளில்..
பிழிய முடியாமலே
நழுவிப் போகிறது காலம்.





நீ மட்டும் என்னவாம்?
நான் உச்சரிக்காத 
அந்த ஒற்றை வார்த்தையின்..
அர்த்தம் தெரிந்தும்
அன்னியமான
வேற்றுமொழி.. அகராதிபோல்
விலகிப் போகிறாய்.

உளியும்.. சுத்தியலும்
ஓசை எழுப்பாமல்..
அந்த முரட்டுப் பாறைக்குள்..
இன்னும்..
உறங்கிக்கொண்டே யிருக்கிறது
ஓர் உயிர்ச் சிலை!


Blog Archive

Followers