Sunday, April 5, 2009

இரவுக்கு தாலாட்டு



தூக்கம் வராத
இரவுப் பொழுதொன்றில்
நான் தூங்காததால்..
நீயும் தூங்கி இருக்க மாட்டாய்
என்றெண்ணி..
தொலைபேசி வழி அழைக்கிறேன்
உனைத் தூங்க வைக்க...,

நான் தூங்கிவிட வேண்டுமென..
நீ 
தொலைபேசியை எடுக்காததன்
நீட்சியில்...
நானும் தூங்க எத்தனிக்கையில்

என் தொலை பேசிவழி
நீ அழைக்கிறாய்..,

பேசிப் பேசியே தூங்க வைத்தோம்
அந்த இரவை!

இப்படித்தான்




விழிகள் இடித்து..
உயிரில் அதிர்வு.

மனக்குகை இடுக்கில்
பார்வையின் விதைகள்.

கனவுகளின் மார்பில் பாலருந்தி
விழிப்பூந்தொட்டியில்
துளிர்த்து சிரிக்கிறது..
இதயங்களின் வார்த்தை.

இமை மாறிப் படபடக்கும்
இமைவழி நிகழ்கிறது..
உயிர் மகரந்தச் சேர்க்கை.

வெவ்வேறான வேர்களில்..
ஒரே மாதிரியான
பூவை மலர்த்தித்
தன் இருப்பைக் காட்டுகிறது
காதல்!

மௌனக்கோட்டை


வெளியே எடுக்க வழியின்றி..
யாளியின் வாய்க்குள்
உருளும் கல்லென
நெடு நாளாய்..
என் வாய்க்குள்..
உருட்டிக்கொண்டிருக்கிறேன்
ஒரு வார்த்தையை..,

ஒலிக்கத் துணிவற்று..
பின்வாங்கி பதுங்கி
தொண்டையில் திரண்ட
மௌனத் தேன்கூட்டின்
அடை ஒன்றைப் பெயர்த்து
உன் செவிகளில்..
பிழிய முடியாமலே
நழுவிப் போகிறது காலம்.





நீ மட்டும் என்னவாம்?
நான் உச்சரிக்காத 
அந்த ஒற்றை வார்த்தையின்..
அர்த்தம் தெரிந்தும்
அன்னியமான
வேற்றுமொழி.. அகராதிபோல்
விலகிப் போகிறாய்.

உளியும்.. சுத்தியலும்
ஓசை எழுப்பாமல்..
அந்த முரட்டுப் பாறைக்குள்..
இன்னும்..
உறங்கிக்கொண்டே யிருக்கிறது
ஓர் உயிர்ச் சிலை!


Followers