Thursday, April 23, 2009

ஆப்பிள் தின்ற நாள் முதல்...




என் உயிருக்கு 
அவசியப்படும் 
அந்த ஒன்றை... 
சிறுபிள்ளை போல்.. 
எங்கோ உனக்குள் 
ஒளித்துவைத்துக்கொண்டு... 
வழிமட்டும் காட்டுவேன்.. 
தேடி கண்டடையென.. 
நீ களமிறக்குகிறாய் என்னை.., 

குறுகிய இடுக்கினில் 
மெல்ல நுழைந்து.. 
அடியும்..முடியும்.. 
ஒருசேர தேடி.. 
பயணம் நீள... 
என் சாதகத்தை 
வேதனையாய் கருதினாயோ.என்னவோ... 
ஒளித்தவிடத்திலிருந்து.... 
நான் தேடி வந்ததை... 
அள்ளி..அள்ளி.. 
நீயே தருகிறாய்.., 

நான் உனக்கு தருவதும்.. 
உன்னிடமிருந்து 
நான் பெறுவதுமான 
இந்த 
விளையாட்டில் மட்டுமதான்.. 
வெற்றி வாய்க்கிறது... 
எதிர்த்துப் போட்டியிடும் இருவருக்கும். 

வெற்றிக்கோப்பை 
ஏந்திய களிப்பில் 
ஒன்றாய் கலந்து இழைகிறது.. 
நம்..ஒற்றை சுவாசம். 

Tuesday, April 21, 2009

திரும்ப கிடைத்த என் விலா எலும்பு




என் ஆன்மாவுக்குள்ளிருந்து 
இறங்கி வ்ருகிறது ஒரு வார்த்தை 
நெடுநாளாய் பிரிக்கப்பட்ட 
உன்னையும் என்னையும் சந்திக்க.

திறந்த உன் இமைக்குள்ளிருந்து 
நான் வெளிவந்து எட்டிபார்த்தது 
ஓர் புது உலகக்த்தை.

யார் எதைஅடைக்காத்தோம் 
கருவில் சுமந்தோம் 
என தெரியவில்லை 
ஆனாலும் நாம் நம்மை 
 ஈன்றெடுத்தோம்..!

சமாதிக்குள் வைக்கப்பட்ட
 சிரிப்பொலிகளெல்லாம் 
ஒன்றுகூடி கைகோர்த்து 
களிசெய்து புளகமெய்தின, 
பிறகுதான் தெரிந்தது 
அதை உயிரோடே 
சமாதி வைத்திருந்ததும்..
அவைகளும் ந்ம்மோடே
மூச்சடக்கி வாழ்ந்ததும் 

மரணப்படுக்கையில் 
இறுதி மூச்சுக்கு 
போராடியவனுக்கு 
கிடைத்தது முதல் மூச்சு.
வற்ண்ட நாவில் 
ஆகாய கங்கையின் ஊற்று.
விழிகளுக்கு 
பெண்பால் கண்ணனின் விசுவரூபம்

எனக்கு கிடைத்தது 
என்னிலிருந்து 
எடுக்கப்பட்ட 
எனது விலா எலும்பு.. 

Thursday, April 16, 2009

வீடு திரும்புதல் குறித்து



வாழ்வின் 
ஒப்புமையற்ற தன்மைக்கு 
உவமானம் வேண்டுமா..? 

வாழாததில் வாழும் 
கனவு அது. 
இருப்பதாய் காட்டும் 
இல்லாமையின் 
இருப்பு அது. 

ஓடும் பெரு நதியில் 
எங்கோ ஓரிடத்தில் 
சட்டென குமிழ்ந்து 
பட்டென வெடிக்கும் 
நீர் குமிழ் அது. 

உடனிருப்பதாய் காட்டி 
உபயோகப்படாத 
நிழல் அது 
சூரிய சூட்டில் 
சலவையாகும் 
பனித் துளி அது. 

காரிருள் வானில் 
பளிச்சென தோன்றி 
நொடியில் மறையும் 
மின்னல் அது. 

நிழலாய் தொடரும் 
பிறவியை அறுப்போம் 
விழலெனப்போகும் 
வாழ்வின் கணங்களை 
முழுமையில் மூழ்கி 
மூச்சடக்கி 
பிறவா நிலையின் 
முத்தெடுத்து 
புறப்பட்ட இடத்தின் 
முகவரி தேடி 
திரும்பும் வீட்டுக்குள் 
பத்திரமாய் 
ஒளித்துவ்வைப்போம். 

Monday, April 13, 2009

நீலம்



ஏ..வாசுகி.. 
கெட்டித்த மேலோட்டை 
மென்மையாக்கி 
மனதிடை புகுந்த 
பார்வை மத்தால் 
கனவொரு பக்கமும் 
நினைவொரு பக்கமும் 
நீயே நின்று 
காதலை கடைந்ததன் 
முடிவில் திரண்ட 
அமிழ்தத்தை 
அள்ளி அள்ளி பருகிவிட்டு 
ஆலகாலத்தை 
எனக்கு தந்துவிட்டுப்போகிறாய்.. 

ஒற்றை கையால் 
கண்டத்தை இறுக்கி 
மறுகையால் 
நானெழுதிய 
கவிதையெங்கும் 
பாரித்திருக்கிறது நீலம். 
நுரைத்து வழிகிறது 
உனக்கான 
காதல் சொட்டும் 
வாசகங்கள். 

Sunday, April 12, 2009

எரிதழல் கொண்டுவா தோழி


எரி தழல் கொண்டுவா தோழி சிறு தீப்பந்த நுனியினில் 
சின்னதாயொரு தனல் பொட்டு வைக்க..! 

காட்டு விறகினில் 
கண்டெடுத்த கட்டையாய் 
கண்டாயோ இதை நீ..,.? 
நேற்றையப் பொழுதினில் 
நெடும்படை கண்டு 
உரிமையின் வேள்வியில் 
உயிரை உகுத்த 
ஒரு வீரனின் 
தீரா நடையினில் 
உதிர்ந்த காலின் எலும்பிது..! 

பற்றி எரிந்திட 
சுற்றிய துணியின் 
கதை அறிவாயோ..? 
அது.. 
அத்துமீறல் 
பற்றியிழுத்த கொடும்பொழுதொன்றில் 
மிச்சமாய் கிடைத்த 
என் தங்கையின் சேலை...! 

வாழ்வின் காட்சி இழந்த 
பல நூறு விழிகளின் 
கண்ணீர் வடித்து 
தூக்கிப்பிடித்த 
இத் தீப்பந்தம் எரிய 
எரிதழல் கொண்டுவா தோழி..! 

வெடிகளின் பாதையில் 
வீரமே வெளிச்சம். 
விருட்சம் ஆவதற்கே 
விழுகின்றன விதைகள்...! 

Followers