Sunday, April 12, 2009

எரிதழல் கொண்டுவா தோழி


எரி தழல் கொண்டுவா தோழி சிறு தீப்பந்த நுனியினில் 
சின்னதாயொரு தனல் பொட்டு வைக்க..! 

காட்டு விறகினில் 
கண்டெடுத்த கட்டையாய் 
கண்டாயோ இதை நீ..,.? 
நேற்றையப் பொழுதினில் 
நெடும்படை கண்டு 
உரிமையின் வேள்வியில் 
உயிரை உகுத்த 
ஒரு வீரனின் 
தீரா நடையினில் 
உதிர்ந்த காலின் எலும்பிது..! 

பற்றி எரிந்திட 
சுற்றிய துணியின் 
கதை அறிவாயோ..? 
அது.. 
அத்துமீறல் 
பற்றியிழுத்த கொடும்பொழுதொன்றில் 
மிச்சமாய் கிடைத்த 
என் தங்கையின் சேலை...! 

வாழ்வின் காட்சி இழந்த 
பல நூறு விழிகளின் 
கண்ணீர் வடித்து 
தூக்கிப்பிடித்த 
இத் தீப்பந்தம் எரிய 
எரிதழல் கொண்டுவா தோழி..! 

வெடிகளின் பாதையில் 
வீரமே வெளிச்சம். 
விருட்சம் ஆவதற்கே 
விழுகின்றன விதைகள்...! 

1 comment:

Blog Archive

Followers