
நாகலிங்க பூக்கள்
காற்றிலுதிர்ந்து
கப்பலாய் மிதக்கும்
தெப்பக்குளத்தின்
படித்துறையில்..
அன்றொரு நாள்..
நான் என்னோடு உட்கார்ந்திருந்தேன்..,
சற்றைக்கெல்லாம்..
எதிர்பாராமல்
என்னிலிருந்து
வெளிகிளம்பிய
நீயும் அருகில் வந்து உட்கார..,
எல்லோருமே
பேசிக்கொண்டிருந்தோம்..
இயலாமைகளுக்கும் கனவுகளுக்குமான
மைதானத்தில்
கடைசி நொடியில் கைவிட்டுப்போன
கோப்பை பற்றிய
என் அழுகையை..
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.,
கைக்குட்டை எடுத்து
நீ துடைப்பதற்கு தடையாய்
உன்னிலிருந்து
நீ பெயர்த்து வைத்த
உன் அப்பாவும்..
அருகே..,
நிரம்பிவிட்டது படித்துறை..
உன் குடும்பம்
என் குடும்பம் என்று..,
இப்போதேனும்
என்னோடு நீ வர மறுப்பதால்..
வேறு வழியின்றி
நான் என்னோடு
அங்கிருந்து கிளம்பினேன்.
மறுபடி ஏதேனும்
ஒரு நாளில்
நாம் சந்திக்ககூடும்
இப்படி..!
i luvd this one.. the ultimatum!!
ReplyDeleteஒரு காதல் தோல்வியை இதைவிட அருமையாக யாரும் சொன்னதில்லை
ReplyDelete