
நீ ஏறிவிட்டதாய்ச் சொன்ன
பேருந்தின் வருகைக்குக்
காத்திருந்த நிமிடங்களின்
வலி பற்றி..
உன்னிடம்..
என்றுமே.. சொன்னதில்லை நான்
நின்று போகும்..
ஒவ்வொரு பேருந்திலும்..
நீ இருக்கக்கூடும்..
என்கிற தவிப்பும்..,
இறங்குகிற கால்களில்..
உன் தடயம் தேடும் குறுகுறுப்பும்..
அன்னியப்பட்டு
எனக்குகந்த.. உன் நிறத்தில்
ஆடையணிந்த மனுஷிகளிடை..
உன்னைக் காணாத ஏமாற்றமும்..
உயிரில் செருகும் கத்திகளை!
உன் வருகைக்குப் பிறகு..
குளிர்பானம் பருகுகையில்
நீ வந்த பேருந்தைவிடப்
பத்து மடங்கு
நான் வேகமாய் இருப்பதாய்
நீ பேசிச் சிரிக்கையில்..
என்னிடம் சொல்லிக்கொண்டு
நீ கிளம்பப்போகும்
பேருந்து பற்றிய
வேதனையில் நானிருப்பதை
என்றாவது அறிவாயா நீ?
நான் உடன் வராத
தனித்த உன் பயணங்களில்..
என்றாகிலும் நீ
ஜன்னலோரத்தில் எட்டிப் பார்க்கையில்
கண்டுகொள்ளக்கூடும்..
அதே பேருந்தில்..
தொங்கிக்கொண்டு வரும் என் நேசத்தை!
இந்த கவிதை யூத்ஃபுல்விகடன் டாட் காமில் வெளியானது
மிக உயர்ந்த சிந்தனை
ReplyDelete