Sunday, April 5, 2009

அழகின் அரக்கி




அடி சாகஸக்காரி
உன் கன்னக்கோல் சிரிப்பால்
களவு போகிறது என் உறக்கம்.
உன் விழியின் சின்ன அசைவிலும்
விரிசல் காணுகிறது
என் வீர்யம்.
எந்தக் கலை பண்பாட்டிலும்
காண முடியாத அடவுகளை
அடக்கியாளுகிறது
உன் நடை.
குயிலும் யாழும் சிட்டுக்குருவியும்
கூடு கட்டும்
உன் தொண்டைக் குழியிலிருந்து
நித்தமும்
நவ நவமாய்
நழுவி விழுகிறது சிம்பொனி.
உன் பாதக் கொலுசுகளிடம்
பணயம் வைக்கிறேன்
என் கர்வத்தை.
கை விலங்கு கால் விலங்கு
கேள்விப் பட்டிருக்கிறேன்,
நீ எனக்கு..
மெய் விலங்கை அல்லவா
மெய்யாகவே பூட்டிவிட்டாய்?

2 comments:

  1. வணக்கம். மின் தமிழ் மடலாடற் குழுமத்தில் தங்களது கவிதைகளை ரசித்து தங்களது வலைப்பூவிற்குள் பயணப்பட்டேன். தங்கிவிட ஆசைதான். ஆயின் யதார்த்தம் காதருகில் நின்று சாத்தானாக நினைவூட்டிக் கொண்டே இருக்கையில் நான் வந்ததைப் பதிவு செய்து திரும்புகிறேன். யுகமாயினுக்கென உங்களுடைய படைப்புகளை அனுப்பலாம்தானே ! அச்சு இதழாக வெளிவந்து முன்னெடுத்துச் சென்றுக் கொண்டிருப்பதில் தானகளும் உடன் பயணியாக இணைந்து கொள்ளலாம் - சித்தன் yugamayini.blogspot.com. இந்த வலைப்பூ ஒரு அறிவிப்புத் தளம் மட்டுமே.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சித்தன் ஐயா.,
    யுகமாயினி வாசித்திருக்கிறேன்.அதில் என் படைப்புகள் எழுதுவது குறித்து பெருமையே.நிச்சயம் நாம் அனைவரும் ஓர் நற்பனியை முன்னெடுத்து செல்வோம்.நீங்கள் ஆணையிடுங்கள். செயல்பட எனது எழுதுகோல் காத்திருக்கிறது.நன்றி.

    ReplyDelete

Blog Archive

Followers