Saturday, April 11, 2009

நீ காற்று...






வடதிசை நோக்கிய 
என் தெருவில் 
நான் நடந்த 
இன்றின் எதேச்சையில் 
அன்றொரு நாள் 
உன்னை எதிர்கொண்டது போலவே 
எதிர்கொண்டேன் 
திடீரென வீசிய காற்றை..! 

பழுத்த சருகுகளும் 
இள்ம்பிஞ்சு பூக்களும் 
சேர்ந்துதிர மரமுலுக்கி., 

மோனத்தவமிருந்த 
தென்னைக்கீற்றிடை புகுந்து 
யாழிசைத்து., 

மொட்டைமாடியில் 
கொடியிலுலர் 
சலவைத்துணிகளைத் தாலாட்டி.., 

காகமொன்றின் 
இயல்பு பறத்தலை 
சட்டென குலைத்து.., 

ஏதோ நடப்பதாய் 
பாதசாரிகளின் 
கவனம் ஈர்த்து.., 

தெருவில் குவிந்திருந்த 
குப்பைகளை.. 
சப்தமிட விலக்கி.., 

என்னை நெருங்குகையில்.. 
எதிர்பாராவண்ணம் 
எங்கோ திரண்ட 
தூசுகளை அள்ளி 
என் முகம் அப்பி.., 

நான் முகம் துடைத்து 
சுதாரிப்பதற்குள்.. 
ஏதும் நடவாதது போல்.. 
என்னை கடந்து போகிறது காற்று.. 

ஏதும் நடவாதது போல்.. 
என்னை ஏமாற்றி.. 
என்னை கடந்து போன... 
உன்னைபோலவே..! 

1 comment:

  1. அருமை என்ற ஒரு சொல் இந்தக்கவிதைக்குப் போதாது

    ReplyDelete

Blog Archive

Followers